Jesus Power
Ministries

Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

கர்த்தர் நல்லவரே

கர்த்தர் நல்லவரே

கர்த்தரைத் துதியுங்கள்;அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது சங்கீதம்.107:1

இன்றைய வேதபகுதி:சங்கீதம் 107:1-22

 

நாம் நினைத்தபடி காரியங்கள் நடந்தாலும் நடக்காமல் போனாலும் கர்த்தர் நல்லவரே. சூரியன் பிகாசித்தாலும், அந்த பிரகாசம் நமக்குத் தெரியாமல் மேகங்கள் மறைத்தாலும், சூரியனைக் குறித்த கருத்தும் நம்பிக்கையும் மாறாது. அது ஒளியைக் கொடுக்கின்ற ஒன்று என்பதை யாரும் சந்தேகிப்பதில்லை. அது போல சில பிரச்சினைகள், நோய்கள், நெருக்கடிகள், போராட்டமான சூழ்நிலைகள் மேகங்களாக வாழ்வில் சூழலாம். அந்தச் சூழலில் கர்த்தர் நல்லவர் என்பதை நாம் மனதார உணர இயலாமல் போகலாம். ஆயினும், கர்த்தர் நல்லவர் என்ற விசுவாசமும் நம்பிக்கையும் மாற்றத்திற்குரியதல்ல..

 

பலவிதமான கஷ்டங்கள் வழியாகக் கடந்து சென்றார் தேவ பக்தர் ஒருவர், ஆயினும் அவர் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தை "கர்த்தர் நல்லவர் ''அவரைத் துதியுங்கள் என்பதாகும். "இத்தனை துன்பங்களைக் காண நேரிட்ட உங்களால் எப்படிக் கர்த்தர் நல்லவர் என்று சொல்ல முடிகிறது என்று கேட்டார் ஒருவர். எனக்கு என்ன நேரிடுகிறது என்ற அடிப்படையில் கர்த்தரை நல்லவரா, இல்லையா என்று நிதானிப்பது சரியாயிராது. எனக்கு என்ன நேர்ந்தாலும் "என் தேவன் நல்லவர்" என்ற விசுவாச அஸ்திபாரத்திலேயே நான் நிற்பேன் என்றார் அவர்.

 

கர்த்தர் நல்லவர் என்றால், யோசேப்பு ஏன் அடிமையாக மாறினான்? கர்த்தர் நல்லவர் என்றால், தாவீது ஏன் அநாதையைப் போல அலைந்தான். கர்த்தர் நல்லவர் என்றால் யோபு ஏன் அனைத்தையும் இழந்து போனான்? கர்த்தர் நல்லவர் என்றால், பவுலுக்கு ஏன் வாழ்க்கை முழுவதும் சோதனைகள்? என்றெல்லாம் நாம் ஏராளம் கேள்விகள் எழுப்ப இயலும். ஆயினும், அவர்கள் யாவரும் கர்த்தர் நல்லவர் என்ற உண்மையைத் திரும்பத் திரும்ப உறுதி செய்தார்கள்.

 

உண்மையான தேவ பக்தர்கள் எந்தத் துன்பங்களின் நடுவிலும் கூட, கர்த்தர் நல்லவர் என்றே அறிக்கை செய்வார்கள். அது மத பக்தி வைராக்கியத்தின் விளைவோ, கண்மூடித்தனமான நம்பிக்கையின் விளைவோ அல்ல. அது துன்பங்களின் நடுவிலும் கர்த்தருடைய ஐக்கியம், கர்த்தர் அருளும் சமாதானம், கர்த்தர் அருளுகின்ற நம்பிக்கை, கர்த்தர் தருகின்ற உள்ளான ஊக்குவிப்புகள் ஆகியவற்றை அனுபவித்து மகிழ்ந்ததின் விளைவுகளாகும். ஆயிரம் பிரச்சினைகள் வெளியிலிருந்து

வருத்தினாலும், இருதயத்திற்குள் ஆண்டவர் தம்மை நல்லவர் என்று அறிவித்து உறுதிப்படுத்துகின்றார்.

 

ஜெபம்:

அன்பின் பரலோகப் பிதாவே, எல்லா சூழ்நிலைகளிலும் நீர் நல்லவரென்பதை விசுவாசிக்கிற கிருபையை எனக்குத் தாரும். துன்பங்களும் சோதனைகளும் வந்தாலும், உமது நன்மையையும் அன்பையும் சந்தேகிக்காத இருதயத்தை எனக்குத் தாரும். உமது சமாதானத்தாலும் நம்பிக்கையாலும் என்னை நிரப்பி, எப்போதும், "கர்த்தர் நல்லவரே; அவரைத் துதியுங்கள்" என்று அறிக்கை செய்யும் வாழ்க்கையை அருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்