Jesus Power
Ministries

Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

புதிய காரியம்

புதிய காரியம்

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன். ஏசாயா 43:19

இன்றைய வேத பகுதி :ஏசாயா 43:1-20

சில நேரங்களில் நமக்கு முன்பாக நிலவுகின்ற வருத்தத்திற்குரிய சூழ்நிலைகள் மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. நல்லது நிகழும் என்ற நம்பிக்கையோடு முன்னோக்கிப் பார்க்கத்தக்க அடையாளங்கள் எதுவும் தென்படுவதில்லை. ஆனால், தேவன் புதிய காரியங்கைளச் செய்கின்றவர். எந்த நல்ல அறிகுறிகள் கண்களுக்குத் தோன்றாத வேளைகளிலும், ஆச்சரியமான காரியங்களைச் செய்கின்றவர். எனவே தற்போது நிலவுகின்ற சூழ்நிலைகளின் அடிப்படையில் எதையும் கணிக்காமல், தேவனுடைய வல்லமையைச் சார்ந்து புதிய காரியங்களை எதிர்பார்க்கலாம்.

ஆபிரகாம் தம்பதியினர் குழந்தை பாக்கியத்திற்கேதுவான இயற்கை வாய்ப்புகள் யாவற்றையும் இழந்த பின்னரும் குழந்தை பாக்கியம் பெற்றனர். அது கர்த்தர் செய்த புதிய காரியம். ஆடு மேய்ப்பனாகிய மோசேயின் முன்பாக அரசன் பணிந்தது புதிய காரியம். செங்கடல் பிளந்ததும், யோர்தான் பிரிந்ததும், வானத்திலிருந்து மன்னா பொழிந்ததும் புதிய காரியங்கள். இப்படி ஏற்கெனவே நடக்கவில்லை.

நோவா, ஆபிரகாம், யோசேப்பு, மோசே. யோசுவா, தாவீது போன்றோர் நம்பிக்கைக்கு வாய்ப்பற்ற சூழ்நிலைகளில், தேவனால் புதிய காரியங்களைக் கண்டவர்கள், அவர்கள் தேவனுடைய திட்டங்கள் நிறைவேறவும், தேவனுடைய நோக்கங்களைச் செயல்படுத்தவும் தங்களை அர்ப்பணித்தவர்கள். தங்களுக்குத் தேவன் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிராமல், தேவனுக்காகத் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்டவர்கள். எனவே அவர்களுக்காகத் தேவன் புதிய காரியங்களைச் செய்தார்.

ஜெபம், உபவாசம், விசுவாசம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. ஆனால், இவைகளால் மட்டுமே புதிய காரியங்கள் நிகழ்ந்துவிடாது. நம் வாழ்வின் மேல் தேவன் வைத்துள்ள திட்டம், நோக்கம் ஆகியவற்றை அதிக முக்கியமாக எண்ண வேண்டும். அவை நிறைவேறும் இலக்கை நோக்கி வாழ்க்கைப் படகைச் செலுத்த வேண்டும். தேவனுடைய விருப்பங்களுக்காக வாழ்வதை நம் வாழ்வின் இலக்காக்கிக் கொண்டால், அங்கே புதிய காரியங்களைத் தேவன் செய்தாக வேண்டிய கட்டாயம் நேரிட்டு விடுகிறது. யோர்தான் பிரிந்தது போன்று, எரிகோ உடைவது போன்று ஒரு அற்புதமான புதிய காரியத்தைக் கர்த்தர் உங்களுக்காகச் செய்வார். ஆனால் நீங்கள் உங்களின் சொந்த இலக்கை நோக்கி அல்ல. தேவ நோக்கத்தின் இலக்கை நோக்கிச் செல்ல ஆயத்தமாகுங்கள்.

ஜெபம்:
அன்பின் பரலோகப் பிதாவே,
நீர் புதிய காரியங்களைச் செய்கிற தேவன் என்பதை விசுவாசத்தோடு அறிக்கையிடுகிறேன். என் கண்களுக்கு எந்த நல்ல அறிகுறியும் தெரியாவிட்டாலும், என் வாழ்க்கையில் உமது அற்புதமான செயல்களை எதிர்பார்க்கும் விசுவாசத்தை எனக்குத் தாரும்.
என் சொந்த விருப்பங்களின்படி அல்ல, உமது திட்டமும் நோக்கமும் நிறைவேறும் வாழ்க்கையை வாழ எனக்கு கிருபை அளியும். உமக்குப் பிரியமான பாதையில் நடக்கவும், உமது சித்தத்திற்குக் கீழ்ப்படியவும் என்னை வழிநடத்தும்.
என் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அனைத்தையும் நீக்கி, யோர்தான் நதி பிரிந்ததுபோலும், எரிகோ மதில் இடிந்ததுபோலும், உமது மகிமை வெளிப்படும் புதிய காரியங்களைச் செய்யும். என் வாழ்க்கை உமது நாமத்தை மகிமைப்படுத்தும் சாட்சியாக மாறட்டும்.
இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன்.
ஆமென்.